கள்ளக்குறிச்சி அருகே, வாக்காளர்களை கவர முயற்சி வீடு வீடாக அரிசி மூட்டைகள் வினியோகம்
கள்ளக்குறிச்சி அருகே வாக்காளர்களை கவர வீடு வீடாக அரிசி மூட்டைகள் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு பயன்படுத்தப்பட்ட மினிலாரியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கள்ளக்குறிச்சி
உள்ளாட்சி தேர்தல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்கான தேர்தல் தேதி கடந்த 13-ந் தேதி அன்று அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தேர்தலையொட்டி வேட்பாளர்களோ அல்லது அவர்களின் முகவரோ ஓட்டு கேட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ரகசிய தகவல்
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம் கணங்கூர் கிராமத்தில் வாக்காளர்களை கவர சிலர் தேர்தல் விதிமுறையை மீறி ஓட்டுக்காக தலா 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகளை மினிலாரி மூலம் வீடு, வீடாக வினியோகம் செய்து வருவதாக வரஞ்சரம் போலீசாருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் கணங்கூர் கிராமத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அரிசி மூட்டைகளை வினியோகம் செய்தவர்கள் மினிலாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பறிமுதல்
இதனிடையே அதிகாரிகள், மினிலாரி மற்றும் அதில் இருந்த 3 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.