சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் தேநீர் குடித்த தேனி கலெக்டர் கொரோனா தடுப்பூசி பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக பாராட்டு

கொரோனா தடுப்பூசி பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் தேனி மாவட்ட கலெக்டர் தேநீர் குடித்து கலந்துரையாடினார்.

Update: 2021-09-16 16:28 GMT
கம்பம்:
கொரோனா என்ற கொடிய தொற்று நோயின் பிடியில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு மாநிலம் முழுவதும் கடந்த 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாமை நடத்தியது. அப்போது சில மாவட்டங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்றும், தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் அறிவித்தன. இதனால் பொதுமக்கள் மத்தியில்  கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் ஏற்பட்டது. 

அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த 12-ந்தேதி மொத்தம் 410 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது கலெக்டர் முரளிதரன் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள இலக்கை விட கொரோனா தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் வீடுகளுக்கு சென்று தேநீர் குடிப்பேன் என்றும், கொரோனா தடுப்பூசி பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பேன் என்றும் அறிவித்து இருந்தார். கலெக்டரின் இந்த அறிவிப்பை கேட்டு அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி முகாமை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்ற முனைப்பு ஏற்பட்டது. 

தேநீர் குடித்த கலெக்டர்

இந்தநிலையில் மெகா முகாமின்போது கம்பம் ஒன்றியத்திற்குட்பட்ட சுருளிப்பட்டி ஊராட்சியில் 18 வயது பூர்த்தியடைந்த மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 985 பேரில், 4 ஆயிரத்து 502 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது தேனி மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள இலக்கை காட்டிலும் அதிகம் ஆகும். 

இதையடுத்து கொரோனா தடுப்பூசி பணிகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக சுருளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் வீட்டிற்கு நேற்று கலெக்டர் முரளிதரன் வந்தார். பின்னர் அவர் அங்கு தேநீர் குடித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்களுடன் கலந்துரையாடினார். மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, கம்பம் ஒன்றியக்குழு தலைவர் பழனிமணி கணேசன், கம்பம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவர் தங்கராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தமயந்தி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தமிழரசன், ரேணுகா காட்டுராஜா, சுருளிப்பட்டி ஊராட்சி துணைத்தலைவர் ஜெயந்திமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், கோதண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்