பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்தது-4 பேர் படுகாயம்
பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பர்கூர்:
வேன் கவிழ்ந்தது
கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளியில் இருந்து கருங்கற்களை ஏற்றி கொண்டு வாணியம்பாடிக்கு நேற்று வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் பர்கூரை அடுத்த அத்திமரத்துப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பாஞ்சாலியூர் பிரகாஷ் (வயது 28), அருள் (32), சீனி (22), பிரபு (22) ஆகிய 4 பேர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் சாலையில் கவிழ்ந்து கிடந்த வேனை கிரேன் உதவியுடன் மீட்டு சாலையோரம் நிறுத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலையில் வேன் கவிழ்ந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.