தூத்துக்குடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வடமாநில தொழிலாளர்கள் பலி

தூத்துக்குடியில் நடந்து வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 வடமாநில தொழிலாளர்கள் பலியானார்கள்.

Update: 2021-09-16 15:03 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடந்து வரும் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, சாலை பணிகள், பஸ் நிலைய விரிவாக்கப் பணிகளும் அடங்கும்.
அதன்படி, தூத்துக்குடி சுந்தரவேல்புரம் 2-வது தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
சுவர் இடிந்து விழுந்தது
நேற்று மாலையில் அந்த பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக சாலையோரத்தில் வீடுகளின் சுவரை ஒட்டி பள்ளம் தோண்டி இருந்தனர். அதில் சிமெண்டு தளம் அமைப்பதற்காக கம்பிகளை கட்டும் பணியில் 8 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் தனியார் நிறுவன வாகன நிறுத்தும் இடம் அருகே கம்பி கட்டும்போது, அதன் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பாஹிராத் (வயது 23), அமித் (21) ஆகிய 2 தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
2 பேர் சாவு
இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த நிலையில் கிடந்த பாஹிராத், அமித் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்த 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மற்றொரு தொழிலாளியையும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அமைச்சர் விசாரணை
இதற்கிடையே, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். மேலும் அவர், இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்.
அப்போது மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, தலைமை என்ஜினியர் ரூபன் சுரேஷ் பொன்னையா, செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், காந்திமதி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட பணியில் ஈடுபட்ட 2 தொழிலாளர்கள் சுவர் இடிந்து விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்