நீலகிரியில் 10 ம் வகுப்பு மாணவி உள்பட 3 பேருக்கு கொரோனா
நீலகிரியில் 10 ம் வகுப்பு மாணவி உள்பட 3 பேருக்கு கொரோனா
ஊட்டி
நீலகிரியில் அரசு பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி உள்பட 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பள்ளி மாணவிக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்கு பின்னர் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மஞ்சூர் அரசு மருத்துவமனையில் மாதிரி கொடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதன் முடிவு நேற்று வந்தது.
அதில் கொரோனா பாதிப்பு உறுதியானது. உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மாணவி சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொரோனா பாதித்த மனைவி மாதிரி கொடுத்த பின்னர் பள்ளிக்கு வந்து சென்றதால், சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது.
தனிமைப்படுத்தி சிகிச்சை
இதையடுத்து நேற்று மாணவிகள், ஆசிரியர்கள் என 90 பேரிடம் இருந்து சுகாதார குழுவினர் மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி 2 நாட்கள் மூடப்பட்டு உள்ளது. மேலும் வகுப்பறைகள், பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
இதேபோல எடக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒரு மாணவர், பந்தலூர் அருகே உப்பட்டியில் பாரத மாதா பள்ளியில் ஒரு மாணவர் ஆகிய 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நீலகிரியில் 10-ம் வகுப்பு மாணவி, 2 மாணவர்கள் என 3 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 நாட்கள் விடுமுறை
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கூறும்போது, மஞ்சூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மாணவிக்கு கொரோனா பாதித்ததால் 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இதேபோல எடக்காட்டிலும், பந்தலூர் அருகே உள்ள உப்பட்டியிலும் மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. அந்த பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு இல்லை என்று உறுதியானது.
தொடர்ந்து மற்ற பள்ளிகளில் தொற்று பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது என்றார்.