தூத்துக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை நடந்தது.
அதன்படி விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில், தருவைகுளம் நூர்காலனி பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த ஒரு மினிவேனை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 30 கிலோ எடை கொண்ட 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதைத் தொடர்ந்து போலீசார் மினிவேனை ஓட்டி வந்த தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த ஆவுடையப்பன் மகன் ஆனந்த் (வயது 25), நடராஜபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ரமேஷ் (26) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 40 மூட்டை ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்து, தூத்துக்குடி குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.