சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி என்ஜினீயர் பலி

சாலையில் நடந்து சென்ற சாப்ட்வேர் என்ஜினீயர், கார் மோதி பலியானார். அவரது கைப்பையை மர்மஆசாமி ஒருவர் திருடிச்செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

Update: 2021-09-16 00:04 GMT
தாம்பரம்,

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 24). பி.டெக் பட்டதாரியான இவர், தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பொருளாதார மண்டல வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று அதிகாலை வேலை முடிந்து அச்சரப்பாக்கம் செல்வதற்காக கடப்பேரி ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் பஸ் நிலையம் செல்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது குரோம்பேட்டையில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி அதிவேகமாக வந்த சொகுசு கார் அர்ஜூன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அர்ஜூன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான அர்ஜூன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய பெருங்களத்தூரை சேர்ந்த ஜெயக்குமார்(34) என்பவரை கைது செய்தனர்.

விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் சாலையில் நடந்து செல்லும் அர்ஜூன் மீது பின்னால் அதிவேகமாக வரும் கார் மோதுவதும், இதில் தூக்கி வீசப்பட்டதில் சாலையில் கிடந்த அவரது கைப்பையை போக்குவரத்து ஊழியர் ஒருவர் எடுத்து அங்குள்ள ஆட்டோவில் வைத்து செல்வதும், சிறிதும் இரக்கமின்றி அந்த கைப்பையை மர்மஆசாமி ஒருவர் திருடிச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்