கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முககவசம் அணியாமல் சுற்றுவோரை கண்காணிக்க 200 அமலாக்க குழுக்கள்
கொரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் முககவசம் அணியாமல் சுற்றுவோரை கண்காணிக்க 200 அமலாக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. முககவசம் அணியாதவர்களிடம் உடனடியாக அபராதம் விதிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, முககவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதையடுத்து இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீசாருடன் இணைந்து மாநகராட்சியின் சார்பில் வார்டுக்கு ஒரு குழு என 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் மாநகராட்சியைச் சேர்ந்த 5 நபர்களும், காவல் துறையைச் சேர்ந்த ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது தவிர்த்து, மாநகராட்சி மற்றும் காவல் துறையின் உயர் அலுவலர்கள் விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது கண்காணிக்கப்படும். சென்னையில் முககவசம் அணியாமல் சுற்றுவோரையும், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிப்பது குறித்தும் அமலாக்க குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
அதன்படி, முககவசம் அணியாத ஒவ்வொருவருக்கும் உடனடி அபராதம் விதிக்க மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு முககவசம் அணியாத ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பகுதிகளிலும் மேற்குறிப்பிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.