சேலம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 பெண்களிடம் 15 பவுன் நகை, செல்போன் பறிப்பு-மயக்க மருந்து கொடுத்து வாலிபர் கைவரிசை

சேலம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 பெண்களிடம் 15 பவுன் நகை, செல்போனை மயக்க மருந்து கொடுத்து வாலிபர் பறித்து சென்றுள்ளார்.

Update: 2021-09-15 22:37 GMT
சூரமங்கலம்:
சேலம் வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் 3 பெண்களிடம் 15 பவுன் நகை, செல்போனை மயக்க மருந்து கொடுத்து வாலிபர் பறித்து சென்றுள்ளார்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
தாய்- மகள்
கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 55), இவருடைய மகள் அஞ்சலி (19). டெல்லியில் வசித்து வரும் இவர்கள், உறவினர் ஒருவரது திருமணத்துக்காக நிஜாமுதின் எக்ஸ்பிரஸ் ெரயிலில் கடந்த 12-ந் தேதி இரவு கேரளாவுக்கு வந்தனர்.
அதே ெரயிலில் கோவையை சேர்ந்த கவுசல்யா (29) என்பவரும் வந்துள்ளார். ரெயில் திருவனந்தபுரம் வந்த போது 3 பேரும் ரெயில் பெட்டியில் மயங்கி கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். மயக்கம் தெளிந்த பிறகு 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
15 பவுன் கொள்ளை
விசாரணையில், சேலத்தில் இரவு உணவுவை வாங்கியதாகவும், கழிவறைக்கு சென்று திரும்பிய பிறகு உணவை சாப்பிட்டதாகவும், சிறிது நேரத்தில் மயங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் தாங்கள் அணிந்து இருந்த 15 பவுன் நகை மற்றும் கவுசல்யாவின் செல்போன் ஆகியவையும் காணவில்லை என்றும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து திருவனந்தபுரம் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 15 பவுன் நகை, செல்போன் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த அக்‌ஷர் பக்‌ஷே (35) என்பவர் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. அவர், சேலம், ஈரோட்டில் முகாமிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மயக்க மருந்து
அதாவது, 3 பேரும் சேலத்தில் சாப்பாடு வாங்கி உள்ளனர். அதனை வைத்து விட்டு கழிவறைக்கு சென்றுள்ளனர். அந்தநேரத்தில் உணவில் மயக்க மருந்து கலந்து இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்