வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆசனூரில் இருந்து பாளப்படுகை வரை தார்ரோடு போடவேண்டும்- மலைவாழ் மக்கள் கோரிக்கை

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆசனூரில் இருந்து பாளப்படுகை வரை தார்ரோடு போடவேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Update: 2021-09-15 22:00 GMT
தாளவாடி
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆசனூரில் இருந்து பாளப்படுகை வரை தார்ரோடு போடவேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 
தாளவாடி 
சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி வழியாக திம்பம் மலைப்பாதையில் உள்ள 27 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக சென்றால்தான் தாளவாடியை அடைய முடியும். ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாகவும், கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் போது ஈரோடு மாவட்டத்தின் நுழைவு வாயிலாகவும் தாளவாடி உள்ளது.
தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்ல வேண்டுமானால் கர்நாடக மாநில பகுதிக்குள் 15 கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீண்டும் தமிழக பகுதிக்குள் சென்று சத்தியமங்கலம் செல்ல வேண்டும்.
தார்சாலை வசதி இல்லை
 கர்நாடக மாநிலத்தில் திடீரென போராட்டங்கள் நடைபெறும் போதும், கொரோனா ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தடை பட்ட போதும் தாளவாடி பகுதி பொதுமக்கள் சத்தியமங்கலம் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
 இதுபற்றி தாளவாடி மலைக்கிராம மக்கள் கூறும்போது, ‘தாளவாடி தனி தாலுகாவாக இருந்தாலும் தனி தீவு போல தான் உள்ளது.
 தாளவாடி பகுதியில் தாளவாடி, திகனாரை, பைனாபுரம், மல்லன்குழி, இக்களூர், நெய்தாளபுரம், தலமலை, ஆசனூர், கேர்மாளம், திங்களூர் என 10 ஊராட்சிகள் உள்ளன. இதில் 7 ஊராட்சிகள் தாளவாடி அதன் சுற்றுவட்டார பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம், ஈரோடு, கோவை செல்ல வேண்டுமானால் கர்நாடக மாநிலத்திக்குள் பயணம் செய்து மீண்டும் தமிழக பகுதிக்குள் சென்று சத்தியமங்கலம் செல்லவேண்டும். இதற்கும் முறையான தார்சாலை வசதி இல்லை.
வனத்துறை கட்டுப்பாட்டில்...
பாதை வசதி இல்லாததால் சத்தியமங்கலம் செல்ல சிரமப்பட்டு வருகிறோம். அதனால் தாளவாடி அடுத்த பாளப்படுகை அருகே தார்சாலை அமைத்து வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். தற்போது இந்த பாதையில் புல்பூண்டுகள் முளைத்து கரடுமுரடாக காணப்படுகிறது. இந்த சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பாதையை தார் சாலையாக மாற்றி செப்பனிட்டால் தாளவாடி இருந்து எளிதாக ஆசனூர் சென்றடைய முடியும். கர்நாடக மாநில எல்லை பகுதிக்குள் நீண்ட தூரம் சுற்றுபாதையில் செல்லாமல் விரைவாக தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் செல்லலாம். 
மேலும் பயண நேரமும் மிச்சமாகும். எனவே மாவட்ட நிர்வாகம் மலைகிராம மக்களின் நலன்கருதி பாளப்படுகையில் இருந்து ஆசனூர் காரப்பள்ளம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை அமைக்க வேண்டும் இது எங்களின் நீண்ட கால கோரிக்கை' என்றார்கள். 

மேலும் செய்திகள்