விஜயநகரில் தொடர் கனமழை; துங்கபத்ரா அணை வேகமாக நிரம்புகிறது
விஜயநகரில் தொடர் கனமழை காரணமாக துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அந்த அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதன்காரணமாக ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூரு:
கனமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து பெய்தது. பின்னர் சற்று ஓய்ந்திருந்த மழை தற்போது மீண்டும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி வடகர்நாடக மாவட்டங்களான பல்லாரி, விஜயநகர், பாகல்கோட்டை, கொப்பல், ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதில் விஜயநகர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அங்கு ஓடும் துங்கபத்ரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்குள்ள துங்கபத்ரா அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணையில் 101 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி) தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது அணையில் 98.7 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. மேலும் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
மல்லப்பிரபா ஆற்றில் வெள்ளம்
இதன்காரணமாக துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள பல்லாரி, விஜயநகர், ஹம்பி, கொப்பல், ராய்ச்சூர், கடபா, அனந்தபுரா, மெகபூப் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விஜயநகர் மாவட்டத்தில் ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது.
துங்கபத்ரா அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் காரணமாக ஹம்பியில் உள்ள சில புராதன சின்னங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல் பாகல்கோட்டை மாவட்டத்திலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மல்லப்பிரபா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக மல்லப்பிரபா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நவிலு தீர்த்த அணை வேகமாக நிரம்பி வருகிறது.
மீட்பு பணிகள்...
அணை வேகமாக நிரம்பி வருவதால் நேற்று அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால் மல்லப்பிரபா ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். அவர்கள் முன்னறிவிப்பு இன்றி திடீரென ஆற்றில் தண்ணீரை திறந்துவிட்டு விட்டதாக குற்றச்சாட்டு கூறியுள்ளனர். கனமழை காரணமாக பாதாமி தாலுகா கோவனகொப்பா கிராமத்தில் உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் கதக் மற்றும் பாகல்கோட்டையை இணைக்கும் கொன்னூர் அருகே உள்ள தரைப்பாலமும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
அதேபோல் உப்பள்ளி - சோலாப்புரா இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையையும் மூழ்கடித்தபடி வெள்ளம் ஓடுகிறது. கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.