படுகாயம் அடைந்த டிரைவருக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு

படுகாயம் அடைந்த டிரைவருக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு

Update: 2021-09-15 19:47 GMT
திருச்சி, செப்.16-
திருச்சி மாவட்டம் முசிறி பைத்தம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராசு (வயது 39). தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்த இவர், கடந்த 16-7-2015 அன்று சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். சேலம்-திருச்சி மெயின்ரோட்டில் முசிறி அருகே வெள்ளூர் சத்திரம் பஸ்நிறுத்தம் அருகே சுந்தரராசு நடந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக அவருக்கு பின்னால் வந்த ஒரு லாரி அவர் மீது மோதியது. இதில் சுந்தரராசுவின் இரு கால்களிலும் லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த விபத்தில் சுந்தரராசு 80 சதவீதம் ஊனமடைந்தார். இதனால் அவரால் வேலைக்கு செல்லமுடியவில்லை. இதைத்தொடர்ந்து தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயமான திருச்சி சிறப்பு சப்-கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த சிறப்பு சார்பு நீதிபதி எஸ்.தங்கமணி, பாதிக்கப்பட்ட சுந்தரராசுக்கு ரூ.21 லட்சத்து 13 ஆயிரத்து 425 இழப்பீடு வழங்க கோவையை சேர்ந்த இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மற்றொரு வழக்கில் கடந்த 28-6-2018 அன்று கார் மோதியதில் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் உரிமையாளரான திருச்சி இ.பி.காலனி பகுதியை சேர்ந்த சம்சுதீனுக்கு (67) ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 395 இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பு சார்பு நீதிபதி எஸ்.தங்கமணி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்