வாலிபர் தலை துண்டித்து படுகொலை

வாலிபர் தலை துண்டித்து படுகொலை

Update: 2021-09-15 19:39 GMT
பொன்மலைப்பட்டி, செப்.16-
திருச்சி பொன்லைப்பட்டியில் தலைதுண்டித்து  வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
தலைதுண்டித்து கொலை
திருச்சி கொட்டப்பட்டு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சின்ராசு (வயது 21). இவருக்கும் பொன்மலை பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று இரவு 7.30 மணியளவில் பொன்மலைப்பட்டி கடை வீதியில் சின்ராசு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சின்ராசுவை வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிருக்கு பயந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டினர். பின்னர் சுற்றிவளைத்து சின்ராசுவின் தலையை துண்டித்து கொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அலறிஅடித்து ஓட்டம்பிடித்தனர். அதேநேரத்தில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் அச்சத்தில் கடைகளை  பூட்டினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்மலை உதவி கமிஷனர் காமராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் நிக்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
காரணம் என்ன?
முதல்கட்ட விசாரணையில் சின்ராசு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்த வருகின்றனர். பொன்மலை அருகே மேலகல்கண்டார்கோட்டை பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  வாலிபர் ஒருவர் 7 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்மலை பகுதியில் தொடர்கொலை நடைபெற்றுவருவால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக பொன்மலைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவ ருகின்றனர்.

மேலும் செய்திகள்