குளித்தலை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 2 டாக்டர்கள் மாற்றம்

குளித்தலை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் குறித்த சர்ச்சை தொடர்பாக 2 டாக்டர்களும் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

Update: 2021-09-15 19:19 GMT
குளித்தலை,
அரசு மருத்துவமனை
குளித்தலை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலராக டாக்டர் ஸ்ரீகாந்த் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக அவர் விடுப்பில் இருந்தார். இந்தநிலையில் குளித்தலை அரசு மருத்துவமனையின் மற்றொரு டாக்டரான பூமிநாதனுக்கு தலைமை மருத்துவ அலுவலர் பொறுப்பு வழங்கப்பட்டது. 
இதையடுத்து அவர் குளித்தலை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் பொறுப்பில் பணியாற்றி வந்தார். இந்த சூழ்நிலையில் விடுப்பில் இருந்த டாக்டர் ஸ்ரீகாந்த் மீண்டும் கடந்த 12-ந் தேதி பணிக்கு திரும்பினார். இதையடுத்து யார் தலைமை மருத்துவ அலுவலர் என்ற குழப்பம் இருந்து வந்தது.
பேனரால் சர்ச்சை
இந்தநிலையில் டாக்டர் பூமிநாதன் குளித்தலை அரசு மருத்துவமனையின் அலுவலக அறை அருகே சிகிச்சை மற்றும் மருத்துவமனை சம்பந்தமான அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள தலைமை மருத்துவ அலுவலர் பொறுப்பிலுள்ள தன்னிடம் தெரிவிக்கலாம் என்பது குறித்த வாசகம் அடங்கிய பேனரை நேற்று வைத்துள்ளார். 
இதனால் குளித்தலை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் யார்? என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டது. இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
மாற்றம்
இதையடுத்து குளித்தலை அரசு மருத்துவமனையின் பொறுப்பு தலைமை மருத்துவ அலுவலராக டாக்டர் சுதர்சனாவுக்கு வழங்கப்பட்டது. பூமிநாதன் சார்பில் வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது. 
இதனைதொடர்ந்து டாக்டர் ஸ்ரீகாந்த்தை பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கும், பூமிநாதன் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் மாற்றுப்பணிக்காக மாற்றப்பட்டனர். 

மேலும் செய்திகள்