16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம்

அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்து உள்ளது. இது தொடர்பாக மணமகன் உள்பட 22 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-09-15 18:55 GMT
சிவகங்கை,

அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி 16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்து உள்ளது. இது தொடர்பாக மணமகன் உள்பட 22 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.
எச்சரித்தனர்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த பெரும்பச்சேரி நாகநாதபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் கோவிந்தராஜன் என்பவருக்கும் கடந்த 9-ந் தேதி சிறுமியின் வீட்டில் திருமணம் நடைபெற இருந்தது. இது பற்றிய தகவல் சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் அமைப்பினருக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி சைல்டு லைன் அமைப்பினர் சிறுமியின் பெற்றோரை அழைத்து பேசி குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று எச்சரித்தனர்.
குழந்தை திருமணம் நடந்தது
இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் திருமணத்தை நிறுத்துவதாகவும், 9-ந்தேதி சிறுமியை குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்துவதாகவும் கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் சைல்டு லைன் அமைப்பினரிடம் கூறியபடி சிறுமியை ஆஜர்படுத்தவில்லை.
இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை நடத்திய போது திட்டமிட்டபடி 9-ந் தேதி அன்று சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இளையான்குடி ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் சின்னப்பெண் சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
22 பேர் மீது வழக்கு
இதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபா ஆகியோர் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்த மணமகன் கோவிந்தராஜன்,அவரது தந்தை ராமச்சந்திரன், தாயார் தேவி, சிறுமியின் தந்தை ராமர், தாயார் முத்துலட்சுமி, இளமனூர் சத்தியேந்திரன் ஜெயந்தி, காட்டு பரமக்குடி பாண்டியன், எமனேஸ்வரம் பால்சாமி, நாகநாதபுரம் கிராம உதவியாளர் முருகன், மற்றும் திருமண பத்திரிக்கை அச்சிட்ட உரிமையாளர் உள்பட 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்