வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்கள்

சிவகங்கையில் வீட்டின் மீது 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இது சம்பந்தமான கண்காணிப்பு கேமரா காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-09-15 18:37 GMT
சிவகங்கை,

சிவகங்கையில் வீட்டின் மீது 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இது சம்பந்தமான கண்காணிப்பு கேமரா காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கையில் தொண்டி ரோட்டில் உள்ள ஏஞ்சல் சர்ச் தெரு பகுதியில் வசித்து வருபவர் பழனியப்பன் (வயது 45) இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் இவரது வீட்டில் பாட்டில் ஒன்று விழுந்து உடையும் சத்தம் கேட்டது. உடனே பழனியப்பன் வெளிேய ஓடி வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பு நின்றிருந்த 2 வாலிபர்கள் அங்கிருந்து ஓடுவதை பார்த்தார்.
வீட்டில் வந்து விழுந்தது பெட்ரோல் குண்டு எனவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா

மறுநாள் காலை அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை பழனியப்பன் பார்த்தார். அதில் 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டுடன் நிற்பதும், அதில் ஒருவர் திரி பற்ற வைத்த பெட்ரோல் குண்டை வீட்டிற்குள் வீசி எறிந்ததும், அதை தொடர்ந்து 2 பேரும் அங்கிருந்து ஓடும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.
இதையடுத்து பழனியப்பன், சிவகங்கை நகர் போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார், இதில் சம்பந்தப்பட்ட 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதா? வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்