பரம்பரை சித்த வைத்தியர்கள் நலவாரியம் அமைக்க வேண்டும்; நாம் தமிழர் கட்சியினர் மனு

பரம்பரை சித்த வைத்தியர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2021-09-15 17:27 GMT
தேனி:
பரம்பரை சித்த வைத்தியர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சித்த வைத்தியர்கள் நல வாரியம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் பாரம்பரிய வைத்தியர்களையும், அவர்களின் பாரம்பரிய வைத்திய அறிவையும் அடியோடு அழித்திட முற்படும் சக்திகளிடம் இருந்து தமிழ்ப் பாரம்பரிய மருத்துவர்கள் மற்றும் வைத்திய கலைகளையும் தோள் கொடுத்து காத்திட வேண்டும். 1998-ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு அரசாணை, கோர்ட்டு உத்தரவு, மத்திய அரசின் தடை என்று எதுவும் இல்லாத நிலையில் பரம்பரை வைத்தியர்கள் யாரும் அரசால் சித்த மருத்துவ மன்றத்தில் சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை. இதனால், பதிவு செய்யாத கிராம மற்றும் பாரம்பரிய வைத்தியர்கள் போலி வைத்தியர்கள் என்று கூறப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். மேலும் மருத்துவமனைகள் ஒழுங்குமுறைகள் சட்டம்-2010-ன்படி பரம்பரை வைத்தியசாலைகள் மூடி சீல் வைக்கப்படுதல், கைது செய்யப்படுதல் போன்ற நெருக்கடிகள் கொடுக்கப்படுவதால் தமிழ்நாட்டில் சுமார் 20 ஆயிரம் பரம்பரை வைத்தியர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.
பரம்பரை வைத்தியர்கள் நலவாரியம் அமைக்க வேண்டி மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை பரிந்துரை செய்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பரம்பரை சித்த வைத்தியர்கள் நல வாரியம் உடனே அமைக்க வேண்டும். அதன் மூலம் நலிவடைந்த வைத்தியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பாரம்பரிய சித்த வைத்தியர்களை பதிவு செய்து அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு வழங்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் மதுரை சித்த வைத்திய சங்கத்தை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மதுக்கடைக்கு எதிர்ப்பு
இதேபோல், ஆண்டிப்பட்டி அருகே அனுப்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் கொடுத்த மனுவில், "அனுப்பப்பட்டியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடை செயல்பட்டது. அதனால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன. இதையடுத்து மகளிர் சுயஉதவி குழுவினர், பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், அந்த கடை அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதிதாக அரசு மதுக்கடை அமைக்க முயற்சி நடக்கிறது. இந்த மதுக்கடை அமைக்கப்பட்டால் மீண்டும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த மதுக்கடை அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்