தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4.60 லட்சம் மோசடி

தனியார் நிறுவன ஊழியரிடம் ஆவணங்களை பெற்று வங்கிக்கடன் வாங்கித்தருவதாக ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்த நண்பர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..

Update: 2021-09-15 17:21 GMT
புதுச்சேரி, செப்.
தனியார் நிறுவன ஊழியரிடம் ஆவணங்களை பெற்று வங்கிக்கடன் வாங்கித்தருவதாக ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மோசடி செய்த நண்பர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்..
தனியார் நிறுவன ஊழியர்
புதுச்சேரி நெட்டப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 39).தனியார் நிறுவன ஊழியர். இவருடன் விழுப்புரம் மாவட்டம் பள்ளித்தென்னல் காலனியை சேர்ந்த சிவானந்தம் வேலை செய்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சரவணனுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. எனவே சிவானந்தம், அவரது நண்பர் அய்யப்பன் என்பவரை புதுவையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்வதாக கூறி அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அவர், வங்கியில் ரூ.5 லட்சம் கடன் பெற்றுத்தருவதாக சரவணனிடம் கூறினார். மேலும் அதற்கான ஆவணங்களையும் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
மோசடி
இந்த நிலையில் 3 மாதத்திற்கு பின் தனியார் வங்கியில் இருந்து சரவணனுக்கு நோட்டீஸ் ஒன்று வந்தது. அதில் நீங்கள் பெற்ற ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் கடனுக்கு இதுவரையில் வட்டி செலுத்தவில்லை என்று கூறியிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரவணன், வங்கிக்கு சென்று நான் தான் கடனே பெறவில்லையே, பின்னர் எதற்காக வட்டி செலுத்தவேண்டும் என்று கேட்டுள்ளார். 
அப்போதுதான், சிவானந்தம், அவரது நண்பர் அய்யப்பன், வங்கி ஊழியர் மணிகண்டன் ஆகியோர் சேர்ந்து சரவணனிடம் ஆவணங்களை பெற்று வங்கிக்கடன் வாங்கி, மோசடி செய்தது தெரியவந்தது.
நீதிபதி உத்தரவு
இது குறித்து சரவணன் புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க பெரியடை போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் சிவானந்தம், அய்யப்பன், மணிகண்டன் ஆகிய 3 பேர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்