போலீசாரால் தேடப்பட்ட 6 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண்

வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 6 பேர் தஞ்சை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

Update: 2021-09-14 21:03 GMT
தஞ்சாவூர்;
வாணியம்பாடியில், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட 6 பேர், தஞ்சை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
வெட்டிக்கொலை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம்(வயது 43). வாணியம்பாடி நகரசபை முன்னாள் உறுப்பினரான இவர், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளராக இருந்து வந்தார். கடந்த 10-ந் தேதி இவர் தனது குழந்தையுடன் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது காரில் வந்த ஒரு கும்பல் திடீரென காரில் இருந்து இறங்கி வசீம் அக்ரமை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் காரில் ஏறி தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
முன்விரோதம்
கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனை சாவடிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டதுடன், கொலை நடந்த போது அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலை நடந்த காட்சிகள் தெளிவாக பதிவாகி இருந்தது.
மேலும் காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள சோதனை சாவடியில் வந்த காரை, போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் சிக்கிய நிலையில் மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்த கஞ்சா வியாபாரி குறித்து வசீம் அக்ரம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
6 பேர் கோர்ட்டில் சரண்
இந்த நிலையில் வசீம் அக்ரம் கொலை வழக்கு தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் அண்ணா காலனி புதுநகர் மல்லிகை தெருவை சேர்ந்த ஜான்தாஸ் மகன் அகஸ்டின்(19), வண்டலூர் ஓட்டேரி விரிவாக்கம் 5-வது தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரவீன்குமார்(20), சென்னை ஊரப்பாக்கம் செல்லியம்மன் நகர் முதலாவது குறுக்குத்தெருவை சேர்ந்த எபினேசர் மகன் அஜய்(21), காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூர் ஓட்டேரி விரிவாக்கம் டி.எஸ்.நகரை சேர்ந்த நாகு மகன் முனீஸ்வரன்(20), வண்டலூர் ஓட்டேரி விரிவாக்கம் 5-வது தெருவை சேர்ந்த மோகனசுந்தரம் மகன் செல்வக்குமார்(21), மண்ணிவாக்கம் கே.கே.நகரை சேர்ந்த பாஸ்கர் மகன் சத்தியசீலன்(20) ஆகிய 6 பேரும் தஞ்சையை சேர்ந்த வக்கீல் வீரசேகர் மூலம் தஞ்சை மூன்றாவது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.
இவர்களை வருகிற 20-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு பாரதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணம் கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்