வருகிற டிசம்பருக்குள் பெங்களூருவில் 3 லட்சம் எல்.இ.டி. தெருவிளக்குகள் அமைக்கப்படும் - பசவராஜ் பொம்மை தகவல்

பெங்களூருவில் வருகிற டிசம்பருக்குள் 3 லட்சம் எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2021-09-14 20:57 GMT
பெங்களூரு:
  
எல்.இ.டி. தெருவிளக்குகள்

  கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் மஞ்சுநாத், தனது தொகுதியில் தௌவிளக்குகள் இல்லாததால் வேலைக்கு சென்று இரவில் வீடு திரும்பும் ஊழியர்கள் குறிப்பாக பெண்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். இதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில் கூறியதாவது:-

  பெங்களூருவில் அரசு-தனியார் பங்களிப்பில் எல்.இ.டி. மின் தெரு விளக்குகள் அமைக்க ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனத்திற்கு கடந்த 2018-ம் ஆண்டு பணி ஆணை வழங்கப்பட்டது. ஆனால் பல்வேறு ஒப்புதல்களை பெற 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டாக தான் நடைபெற்று வருகிறது.

தீவிரப்படுத்த நடவடிக்கை

  அந்த நிறுவனம், ஒரு பகுதியில் பணிகளை தொடங்கி தெரு விளக்குகளை அமைத்து வருகின்றன. நகரின் வேறு இடங்களிலை் தெரு விளக்குகள் பழுதாகி இருந்தாலோ அல்லது புதிதாக மின் விளக்கு அமைக்க வேண்டி இருந்தாலோ அதற்கு அதிகாரிகள், அனுமதி வழங்குவது இல்லை என்று உறுப்பினர் கூறினார். எல்.இ.டி. விளக்குகள் அமைக்கும் பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

  அத்துடன் பழுதான தெரு விளக்குகளை மாற்றவும், தேவைப்படும் இடங்களில் மின் விளக்குகள் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் 3 லட்சம் எல்.இ.டி. தெரு விளக்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகளை 5 கட்டமாக மேற்கொள்ளப்படுகிறது. குறித்த காலத்தில் மின் விளக்குகளை அமைக்காவிட்டால், அந்த நிறுவனத்திற்கு வாரத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க ஒப்பந்தத்தில் விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் செய்திகள்