விநாயகர் சிலையை கரைக்க நண்பருடன் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி சாவு-சேலத்தில் பரிதாபம்
விநாயகர் சிலையை கரைக்க நண்பருடன் சென்ற போது ஏரியில் மூழ்கி சிறுவன்பலியானான்.
சேலம்:
விநாயகர் சிலையை கரைக்க நண்பருடன் சென்ற போது ஏரியில் மூழ்கி சிறுவன்பலியானான்.
விநாயகர் சிலை
சேலம் பஞ்சந்தாங்கி ஏரி எம்.ஜி.நகர் பகுதியை சேர்ந்த அஜாம் மகன் இம்ரான் (வயது 13). இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இம்ரானின் நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன்- தம்பிகளான தீபக்குமார், யுவராஜ் வீட்டில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வீட்டில் விநாயகர் சிலை வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த சிைலயை கரைக்க தீபக்குமார் வீட்டார் முடிவு செய்தனர். அதற்காக அந்த சிலையை எடுத்துக்கொண்டு அங்குள்ள குருவிபனை ஏரிக்கு சென்றனர். அப்போது தீபக்குமார், யுவராஜ், இம்ரான், கோபாலகிருஷ்ணன் ஆகிய 4 சிறுவர்களும் சென்றனர்.
நீரில் மூழ்கி சாவு
ஏரியில் விநாயகர் சிலையை கரைத்தனர். பின்னர் அங்கு கிடந்த தண்ணீரை கண்டதும் சிறுவர்கள் உற்சாகமடைந்து அங்கு குளிக்க தொடங்கினர். அப்போது இம்ரான் தண்ணீரில் மூழ்கினான். இதைக்கண்ட மற்ற சிறுவர்கள் அவனை காப்பாற்றும்படி சத்தம் போட்டனர். அங்கிருந்த சிலர் ஓடி வந்தனர். அதற்குள் சிறுவன் இம்ரான் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டான்.
இதுதொடர்பாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுவன் உடலை தேடினர். இரவு 8 மணி அளவில் சிறுவன் உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
கதறி அழுதனர்
ஏரியில் மூழ்கி பலியான சிறுவனின் உடலை பார்த்த அவனது தாய் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். பின்னர் கிச்சிப்பாளையம் போலீசார் இம்ரான் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சிலையை கரைக்க நண்பனுடன் சென்ற போது ஏரியில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.