என்ஜினீயரிங் மாணவரிடம் மடிக்கணினி திருடியவர் கைது
என்ஜினீயரிங் மாணவரிடம் மடிக்கணினி திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா, உ.மங்கலத்தை சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் யோகேஷ்வரன் (வயது 19). இவர் சிவகாசியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் 3 நாள் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு யோகேஷ்வரன் பஸ்சில் புறப்பட்டார். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ் நின்ற போது, யோகேஷ்வரன் தனது இருக்கையில் மடிக்கணினி வைத்திருந்த பையை வைத்து விட்டு, பஸ்சை விட்டு இறங்கி கடைக்கு டீ குடிக்க சென்று விட்டார். பின்னர் டீ குடித்து விட்டு யோகேஷ்வரன் வந்து பார்த்தபோது பஸ்சில் இருக்கையில் இருந்த மடிக்கணினி வைத்திருந்த பையை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக அவர் உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பஸ் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக ஒருவர் கையில் பையுடன் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் திருச்சி மாவட்டம், புங்கனூர் ஷேக்மோகன் தாஸ் காலனி, காந்தி நகரை சேர்ந்த மோதி (41) என்பதும், அவர் யோகேஷ்குமாரின் மடிக்கணினி வைத்திருந்த பையை திருடியதும் தெரியவந்தது.பின்னர் மோதியிடம் இருந்த மடிக்கணினியை மீட்டு, யோகேஷ்குமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து, மோதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.