தஞ்சை மாவட்டத்தில் 1,328 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தஞ்சை மாவட்டத்தில் 1,328 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் நாயர், நகராட்சி மற்றும் மாநகராட்சி தலைமை கண்காணிப்பு பொறியளர் திருமாவளவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் 1,328 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன் நாயர், நகராட்சி மற்றும் மாநகராட்சி தலைமை கண்காணிப்பு பொறியளர் திருமாவளவன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணியும் அதிகரித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கிராம ஊராட்சி பகுதிகளில் ஒன்று முதல் 2 முகாம்கள் வரை நடத்தப்பட்டன. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் வார்டு தோறும் முகாம்கள் நடைபெற்றன.
நகர் பகுதிகளில் கூட்டம் குறைவு
காலை 7 மணிக்கு முகாம் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. தஞ்சை மாநகராட்சி பகுதிகளில் 51 வார்டுகளை தவிர நிலையான முகாம்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் முகாம்கள் என மொத்தம் 63 முகாம்கள் நடத்தப்பட்டன. இது தவிர 2 நடமாமும் தடுப்பூசி முகாம்களும் செயல்பட்டன.
ஆனால் நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்களில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பொதுமக்கள் வர, வர தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் அதிக அளவில் வந்தால் அவர்கள் சமூக இடைவெளி விட்டு அமரும் வகையில் இருக்கைளும் போடப்பட்டு இருந்தன.
7 ஆயிரம் பணியாளர்கள்
தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஒரு முகாமிற்கு பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் என 650 பேர் பணியாற்றினர். இதே போல் மாவட்டம் முழுவதும் 1,328 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றினர்.
நகர பகுதிகளை விட கிராம பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி வந்தனர். இதனால் ஒரு சில கிராமப்புற முகாம்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மற்ற முகாம்கள் மற்றும் நகர பகுதிகளில் உள்ள முகாம்களில் இருந்தும் தடுப்பூசிகள் உடனடியாக அந்தந்த முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு செலுத்தப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
தஞ்சை ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, கல்லுக்குளம் ஆரம்ப சுகாதார நிலையம், புதிய பஸ் நிலையம், பிள்ளையார்பட்டி, ஒரத்தநாடு தாலுகா பொய்யுண்டார் கோட்டை உள்ளிட்ட இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பிரவீன்நாயர், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.அப்போது கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா (வருவாய்), ஸ்ரீகாந்த் (வளர்ச்சி) ஆகியோர் உடன் இருந்தனர்.
இதே போல் தஞ்சை மாநகராட்சி பகுதியில் பழைய வீட்டுவசதி வாரியத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்த தடுப்பூசி முகாமை சென்னை நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாக தலைமை கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.