திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 727 பேருக்கு தடுப்பூசி

திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 727 பேருக்கு தடுப்பூசி

Update: 2021-09-12 18:26 GMT
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 727 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இலக்கை விட அதிகமானவர்களுக்கு செலுத்தப்பட்டது. 
மெகா தடுப்பூசி முகாம் 
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. எனவே பொதுமக்களை நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 77 ஆயிரத்து 95. இதுவரை 10 லட்சத்து 58 ஆயிரத்து 704 பேர் முதல் தவணையும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 467 பேர் 2-வது தவணையும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 
10 லட்சத்து 18 ஆயிரத்து 391 பேருக்கு முதல் தவணையும், 43 ஆயிரத்து 187 பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியிருந்தது. இதனால் நேற்று 1 லட்சத்து 6 ஆயிரத்து 200 பேருக்கு தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மெகா தடுப்பூசி முகாம் 631 மையங்களில் காலை 7 மணி முதல் தடுப்பூசி போட தொடங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் தடுப்பூசி முகாம் நடந்தது. 
கலெக்டர் ஆய்வு 
இந்த பணிக்காக 2 ஆயிரத்து 480 வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கூட்டுறவுத்துறை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட்டனர். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. 
திருப்பூர் மாவட்டத்தில் முழு ஒத்துழைப்பு தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர். அதன்படி நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 1 லட்சத்து 20 ஆயிரத்து 727 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 
இதில் அவினாசி ஊராட்சி ஒன்றியம், செம்பியநல்லூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, அவினாசி பேரூராட்சி  அலுவலகம், அவினாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருப்பூர் தெற்கு வட்டம் ஆண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இடுவம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். 
மாநகராட்சி கமிஷனர் 
இந்த தடுப்பூசி முகாமில் திருப்பூர் மாநகர பகுதியில் 138 பகுதிகளில் 45 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக 700 மருத்துவ அலுவலர்கள், பணியாளர்கள், உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். 
இதில் சந்திரகாவி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கொங்கணகிரி அங்கன்வாடி மையம், திருவிகநகர், அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கலைமகள் மெட்ரிக் பள்ளி, அங்கன்வாடி மையம், அணைக்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தடுப்பூசி முகாம்களை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார். 

மேலும் செய்திகள்