ஆவணி மாத சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆவணி மாத சஷ்டியையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
நாமக்கல்:
ஆவணி மாத சஷ்டி
நாமக்கல்லில் மோகனூர் சாலை காந்திநகரில் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று சஷ்டியையொட்டி சாமிக்கு சிறப்பு புஜை நடைபெற்றது. தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள் மற்றும் நறுமண பொருட்கள் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சாமிக்கு தங்ககவசம் அணிவித்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நேற்று நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சஷ்டியையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு ஆவணி மாத சஷ்டியையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில், பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரி மலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்தி நகர் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சஷ்டியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.