வல்லநாட்டில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

வல்லநாட்டில் கொரோனா மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-12 17:42 GMT
ஸ்ரீவைகுண்டம்:
வல்லநாட்டில் கொரோனா மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 3-வது அலை ஏற்படாமல் தடுத்திடும் பொருட்டு அரசு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் 42 லட்சம் தடுப்பூசி செலுத்தப்படும் என அரசு உத்தரவிட்டது.
அதன்பேரில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நடவடிக்கை எடுத்தார்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

இதன் தொடர்ச்சியாக நேற்று வல்லநாடு சமுதாய நலக்கூடத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், கருங்குளம் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியலீலா, செல்வி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு சுகாதாரதுறை இயக்குனர் செல்வநாயகம், துணை இயக்குனர் பொற்செல்வன், துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரி, சுகாதார ஆய்வாளர் ஜாகீர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துக்குமாரவெங்கடேசன், வல்லநாடு பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நடமாடும் மருத்துவ குழு

கருங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் பயிற்சி மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட அனைத்து துறையினரும் பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள், வீடுகளில் இருந்து வெளியில் வரமுடியாத முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. அரசு ஊழியர்கள், காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால் அவர்களின் ஆதார் எண்களை சேகரித்து இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சரிபார்த்து இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சத்துணவு கண்காட்சி

மேலும் அந்நத்த பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிகள் மூலம் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசிபோட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முகாமில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் சத்துணவு கண்காட்சியும், சித்த மருத்துவ பயன்பாடு குறித்த கண்காட்சியும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் வி.கோவில்பத்து பஞ்சாயத்து தலைவர் கொம்பன், மருத்துவர்கள் அஸ்வின், கிருஷ்ணஜோதி, டாரில், சித்த மருத்துவர்கள் செல்வகுமார், ரதிசெல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்