நாட்டுப்பற்றை வளர்க்க குழந்தைகளுக்கு பாரதியார் பாடல்களை கற்பிக்கவேண்டும்- மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்
“நாட்டுப்பற்றை வளர்க்க பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாரதியார் பாடல்களை கற்பிக்கவேண்டும்” என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
எட்டயபுரம்:
“நாட்டுப்பற்றை வளர்க்க பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாரதியார் பாடல்களை கற்பிக்கவேண்டும்” என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
பாரதியார் சிலைக்கு மரியாதை
பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு பாரதியார் பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை மந்திரி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முன்பாக பாரதியார் இல்லத்திற்கு சென்ற இருவரும் அங்குள்ள பாரதியார் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், பாரதியாரின் இல்லத்தை சுற்றிப் பார்த்து அங்குள்ள புகைப்படங்கள், ஆவணங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.
நூல் வெளியீடு
தொடர்ந்து பாரதியார் மணிமண்டபத்திற்கு சென்ற மத்திய மந்திரிகள், அங்குள்ள பாரதியார் உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அவர்களுக்கு கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு பாரதியார் வேடமணிந்து இருந்த குழந்தைகளுடன் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துரையடினார். தொடர்ந்து மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் நடைபெற்ற பாரதியார் விழாவில் சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ.சி. மற்றும் பாரதியார் குறித்த நூல்களை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
பின்னர் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட பாரதியார் பற்றிய தொகுப்பினையும் அவர் பார்வையிட்டார்.
பாரதியார் என்றால் உத்வேகம்
இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
மகாகவி பாரதியார் என்றால் உத்வேகம் தான். பாரதியார் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி. சமூக சீர்திருத்தத்திற்காக மிகப்பெரிய பங்கினை பாரதியார் கொடுத்துள்ளார். பாரதியார் பிறந்த பூமியில் நின்று பேசுவதற்கு நடுங்குகிறது.
பாரதியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு சக்தி உள்ளது. ஏழ்மையை தவிர வேறெதையும் பார்க்காதவர். நாட்டு மக்களை எழுப்ப வேண்டும் என்பதற்காக உணர்ச்சி கொடுத்தவர் பாரதியார்.
பாடல்களை கற்றுக்கொடுக்க வேண்டும்
பெண்களுக்கென்று தனியே பத்திரிகையை நடத்தியவர் பாரதியார். இன்றைக்கு பெண்ணுரிமை சமத்துவம் பற்றிப் பேசுபவர்கள், அதை செய்வதில்லை. சக்தி வாய்ந்த தமிழ் மொழியில் மகாகவி பாரதியார் பாடல்களை பாடியுள்ளார். இந்திய சுதந்திரத்துக்கு முன்பே விடுதலை பற்றி, “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்று அவர் பாடிய பாடல் இன்றைக்கு கேட்டால் ஆச்சரியமாக உள்ளது. “ஒளி படைத்த கண்ணினாய் வா வா” என்று சுதந்திரத்திற்கு முன்பே பாடினார். உடலில் உள்ள உணர்ச்சிகளை பிழிந்தெடுத்து எழுதியதுதான் பாரதியாரின் கவிதைகள்.
பனராஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்கு இருக்கை அமைத்து அதற்கு பாரதியார் பெயரை மோடி அறிவித்துள்ளார். வாரணாசி சென்று பல மொழிகளை கற்றுத் தேர்ந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இல்லை என்று பாரதியார் எழுதியுள்ளார். நாட்டுப்பற்றினை வளர்க்க பள்ளிகளில் பாரதியாரின் பாடல்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். பாரதியார் பாடலை கேட்டாலே நாட்டுப்பற்று எழுந்து வரும். குழந்தைகளுக்கு பாரதியாரின் கவிதைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, பா.ஜனதா வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்திராஜ், மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மண்டல தலைவர் ராம்கி, மண்டல பொதுச்செயலாளர்கள் சரவணகிருஷ்ணன், கிஷோர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.