தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேனி மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் ஒரே நாளில் 63 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தேனி:
தேனி மாவட்டத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் ஒரே நாளில் 63 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன. அதன்படி தேனி மாவட்டத்தில் 410 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தன. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள் ஆகிய இடங்களில் முகாம்கள் நடந்தன.
முகாம் நடந்த இடங்களில் மக்கள் ஆர்வத்தோடு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். காலை 7 மணி அளவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. குறைவான எண்ணிக்கையில் தடுப்பூசி ஒதுக்கப்பட்ட மையங்களில் பகல் 11 மணி அளவில் தடுப்பூசிகள் தீர்ந்து போயின. இதனால் பிற்பகலில் தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
தேனி அருகே காட்டுநாயக்கன்பட்டியில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் தடுப்பூசி செலுத்த குவிந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்தனர். தொடர்ந்து மக்கள் அதிக அளவில் வந்ததால் மக்கள் நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க நாற்காலிகள் போடப்பட்டு அதில் அமர வைக்கப்பட்டனர். உப்புக்கோட்டை, கோடாங்கிபட்டி உள்பட சில இடங்களில் பிற்பகலுக்குள் தடுப்பூசி தீர்ந்து போனதால் தடுப்பூசி செலுத்த ஆர்வத்தோடு வந்த மக்கள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
தேனி மாவட்டத்துக்கு தடுப்பூசி பணிக்கான கண்காணிப்பு அலுவலரான சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார், மாவட்ட கலெக்டர் முரளிதரன் ஆகியோர் தேனி, பழனிசெட்டிபட்டியில் நடந்த முகாம்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
63 ஆயிரம் பேர்
இந்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 45 ஆயிரத்து 615 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 18 ஆயிரத்து 30 பேரும் செலுத்திக்கொண்டனர்.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6 லட்சத்து 31 ஆயிரத்து 88 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 4 லட்சத்து 78 ஆயிரத்து 882 பேரும், 2 தவணை தடுப்பூசியை 1 லட்சத்து 52 ஆயிரத்து 206 பேரும் செலுத்திக் கொண்டனர்.