மாவட்ட எல்லையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்
கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால், மாவட்ட எல்லையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். சுற்றுப்புற சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாஹூ தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். கேரளாவில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதாலும், நிபா வைரஸ் பரவி வருவதாலும் நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் மற்றும் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுமையாக கடைபிடிப்பதை அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற தடுப்பு வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நீலகிரியை 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக மாற்ற அனைத்து அலுவலர்களும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பழனிசாமி, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.