முந்திரி ஆலை மேலாளர் உள்பட 2 பேர் பலி
மார்த்தாண்டம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் முந்திரி ஆலை மேலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் முந்திரி ஆலை மேலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முந்திரி ஆலை மேலாளர்
களியக்காவிளை அருகே உள்ள மலையடியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 52). இவர் திருவட்டார் அருகே உள்ள ஒரு முந்திரி ஆலையில் மேலாளராக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அந்த முந்திரி ஆலைக்காக ஒரு கன்டெய்னர் லாரியில் முந்திரி கொண்டுவரப்பட்டது. அந்த லாரியை சுரேஷ் மார்த்தாண்டம் அருகே உள்ள இரவிபுதூர்கடையில் சாலையோரம் நிறுத்தி விட்டு முந்திரியை வேறு வாகனங்களில் ஆலைக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.
பின்னர், அவர் டீ குடிப்பதற்காக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோ சுரேஷ் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அருகில் நின்றவர்கள் அவரை மீட்டு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாகன வியாபாரி பலி
களியக்காவிளை அருகே உள்ள வன்னியூரை சேர்ந்தவர் பிரசன்னா (54). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று பிரசன்னா தனது மோட்டார் சைக்கிளில் மருதங்கோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு நாய் குறுக்கே பாய்ந்தது. நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் பிரசன்னன் கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரசன்னா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துகள் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.