கோபியில் தடையை மீறி விநாயகர் சிலை வைக்க முயன்ற இந்து முன்னணியினர் 8 பேர் கைது
கோபியில் தடையை மீறி விநாயகர் சிலையை வைக்க முயன்ற இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்
கோபியில் தடையை மீறி விநாயகர் சிலையை வைக்க முயன்ற இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தடையை மீறி
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டும் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தவும், விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும் அரசு தடை விதித்து இருந்தது.
இந்த நிலையில் தடையை மீறி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் கோபியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும் என இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கோபியில் ஆண்டுதோறும் வழக்கமாக கோபி பஸ் நிலையம் அருகே விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும் அதே இடத்தில் இந்த ஆண்டும் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று கோபி பஸ் நிலையம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கைது
இந்த நிலையில் இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ணன் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் 3 சக்கர சைக்கிளில் 2 விநாயகர் சிலைகளை வைத்து கொண்டு ஊர்வலமாக கோஷம் எழுப்பியபடி பஸ் நிலையம் நோக்கி வந்தனர்.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று தடையை மீறி வந்ததாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 8 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் 2 விநாயகர் சிலைகளையும், 3 சக்கர சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கோபி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.