அரக்கோணத்தில் தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை
தடையை மீறி விநாயகர் சிலை பிரதிஷ்டை
அரக்கோணம்
பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகில் தடையை மீறி இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அப்போது அவர்கள், 51 தேங்காய்களை சூறையிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விரைந்து வந்து, இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமரசம் ஏற்பட்டதும், அங்கிருந்து விநாயகர் சிலையை எடுத்துச் சென்ற இந்து முன்னணியினர் வடமாம்பக்கம் ஏரிக்கரை அருகில் உள்ள ஒரு கிணற்றில் கரைத்தனர்.
அதில் பா.ஜ.க. மாநில ஓ.பி.சி. அணி துணைத் தலைவர் பாபாஸ் பாபு, முன்னாள் மாவட்ட ஓ.பி.சி. பொதுச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி துணைத் தலைவர் இன்பா, மாவட்ட வர்த்தக அணி செந்தில் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் சண்முகம், கிருஷ்ணமூர்த்தி, கோபி, பிரபா பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.