காலாவதி தேதி இல்லாத 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல்
திருச்சி பீமநகரில் காலாவதி தேதி இல்லாமல் தயாரிக்கப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
திருச்சி
திருச்சி பீமநகரில் செயல்பட்டு வந்த குளிர்பானம் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இல்லாமல் குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று அந்த குளிர்பான நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்பட்ட குளிர்பானங்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்தது தெரியவந்தது.
3 ஆயிரம் லிட்டர் பறிமுதல்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்வதற்காக சட்டப்பூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், அங்கிருந்து 3 ஆயிரம் லிட்டர் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபற்றி மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில், குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் குளிர்பானங்கள் தயாரித்து விற்றால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.