பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆய்வு
சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரெயில்வேக்கு சொந்தமான ரெயில் பெட்டி தொழிற்சாலையில் பொதுமேலாளர் ஜான் தாமஸ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, ரெயில் பெட்டியில் உள்ள ‘காயில் ஸ்பிரிங்’ கில் படியும் தூசிகளை சுத்தம் செய்யும் நவீன எந்திரத்தையும், நவீன ஆய்வகம் ஒன்றையும் தொடங்கி வைத்தார். பின்னர், கடந்த மே மாதம் 15-ந்தேதி தொடங்கப்பட்ட உணவகத்தையும், நூற்றாண்டு பழமையான நீராவி ரெயில் என்ஜினையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பல்வேறு தொழில் நுட்ப வசதியுடன் மேம்படுத்தப்பட்ட எலக்ட்ரிக்கல் துணை மின் நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.
ஆய்வின் முடிவில், பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலை நிகழ்த்திய சாதனைகள் குறித்து பொதுமேலாளர் முன்னிலையில் விளக்கப்பட்டது. அப்போது, ரெயில்வே அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலை ஊழியர்களை பொதுமேலாளர் ஜான் தாமஸ் வெகுவாக பாராட்டினார்.