மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்க பந்திப்பூர் சரணாயலத்தை சேர்ந்த 2 யானைகள் தேர்வு
மைசூரு தசரா விழாவில் புதிய யானைகள் பங்கேற்கின்றன.
கொள்ளேகால்: மைசூரு தசரா விழா அக்டோபர் 10-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்க உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த தசரா விழா எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியாக நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 8 கும்கி யானைகள் பங்கேற்க உள்ளது. இதற்காக முகாம்களில் உள்ள யானைகளை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் மைசூரு தசரா ஊர்வலத்தில் கலந்து கொள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பந்திப்பூர் சரணாலயத்தை சேர்ந்த 2 யானைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. அந்த யானைகளின் பெயர் லட்சுமி, சைத்ரா ஆகும். வருகிற 12-ந் தேதி ராம்புரா வீரனஒசஹள்ளியில் உள்ள வனத்துறை அலுவலகம் செல்லும் 2 யானைகளும், மறுநாள் அதாவது 13-ந் தேதி தேதி லாரிகள் மூலம் மைசூருவுக்கு அழைத்து செல்லப்படுகின்றன. அன்றைய தினம் யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
புதிய யானை
இந்த நிலையில் இந்த முறை தசரா விழா கஜபயணத்தில் புதிய வரவாக அஸ்வதம்மா என்ற கும்கி யானை பங்கேற்க உள்ளது. இந்த யானையின் குட்டி தான் துரோணாச்சார்யா யானை. அஸ்வதம்மா யானை, ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புராவில் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது. இதனால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்த யானையை வனத்துறையினர் பிடித்து கும்கி பயிற்சி அளித்தனர். இந்த யானை முதல் தடவையாக மைசூரு தசரா விழாவில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்பு சவாரி ஊர்வலத்தில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு யானையும், அஸ்வதம்மா யானையும் ஒரே முகாமில் இருப்பதால் நட்புறவாடி வருகின்றன. இதனால் அஸ்வதம்மா யானை தசரா விழாவில் பங்கேற்க ஆயத்தமாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், அஸ்வதம்மா யானை 30 வயதாக இருந்த போது பிடிபட்டது. இந்த யானை சாதுர்யமிக்கது. பிடிபட்ட சில மாதங்களிலேயே அது கும்கியாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அந்த யானை தசரா விழாவில் பங்கேற்க உள்ளது. இந்த யானை 3,500 கிலோ எடை கொண்டது. இதன் உயரம் 2.85 மீட்டர். நீளம் 3.46 மீட்டர் ஆகும் என்றார்.