சேலத்தில் நூதன முறையில் அறக்கட்டளை நிர்வாகி உள்பட 3 பேரிடம் ரூ.14½ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சேலத்தில் அறக்கட்டளை நிர்வாகி உள்பட 3 பேரிடம் நூதன முறையில் ரூ.14½ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-09-08 21:24 GMT
சேலம்,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அறக்கட்டளை நிர்வாகி
சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 71). இவர் அறக்கட்டளை ஒன்றில் பொருளாளராக உள்ளார். இந்த அறக்கட்டளையின் வங்கி கணக்குக்கு ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் இணையதளம் மூலம் நன்கொடை வழங்கி வந்தார். இந்த நிலையில் ஜேம்ஸ் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் மருத்துவ தேவைக்கு பணம் உதவி செய்யுமாறு கூறி ஏற்கனவே நன்கொடை வழங்குபவரின் இணையதள முகவரி இருந்தது.
இதை நம்பிய ஜேம்ஸ் 2 தவணையாக இணையதளத்தில் வந்த வங்கி கணக்குக்கு ரூ.13 லட்சத்து 60 ஆயிரம் அனுப்பி உள்ளார். பின்னர் தான் ஜெர்மன் நாட்டவரின் இணையதளத்தை ஹேக் செய்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜேம்ஸ் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இளநீர் வியாபாரி
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்சல் செரீப் (39). இவர் இளநீர் ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் செய்து வருகிறார். பெங்களூருவை சேர்ந்த யோகேஷ் என்பவர் அப்சல் செரீப்பின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தான் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருவதாகவும், தங்களுக்கு லாரியை வாடகைக்கு கமிஷன் அடிப்படையில் அனுப்புவதாகவும் தெரிவித்தார்.
மேலும் முன் தொகையாக ரூ.40 ஆயிரம் தன்னுடைய வங்கி கணக்குக்கு அனுப்புமாறும் அவர் அப்சல் செரீப்பிடம் தெரிவித்தார். இதை நம்பி அவரும் ரூ.40 ஆயிரம் அவருடைய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் பேசியபடி லாரியை அவர் அனுப்பவில்லை. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அபசல்செரீப் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசியிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிம் கார்டு
இதேபோல் சேலம் குகை பகுதியை சேர்ந்த பெருமாள்சாமி (46) என்பவரிடம் செல்போன் சிம் கார்டு பழுதாகி உள்ளதால், அதை சரி செய்வதாக கூறி குறுந்தகவல் அனுப்பி, அதன் மூலம் ரூ.49 ஆயிரத்து 866 மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரிலும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்