உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1¼ கிலோ தங்க நகைகள் பறிமுதல்

மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1¼ கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-08 18:05 GMT
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 1¼ கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அந்த நகைகளுக்கு ரூ.3 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் வசூலித்த பின்னர் உரியவரிடம் அந்த நகைகள் ஒப்படைக்கப்பட்டது. 
1 கிலோ 600 கிராம் நகைகள்
சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் பகல் 1.15 மணிக்கு மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரயில்வே பாதுகாப்பு படை ஏட்டு் குணசேகரன், பாதுகாப்பு வீரர் ராஜ்குமார் ஆகியோர் ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர். 
அப்போது அந்த ரயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அந்த பையில் 1 கிலோ 600 கிராம் தங்க நகைகள் இருந்தது தெரிய வந்தது. 
வியாபாரிகளிடம கொடுப்பதற்காக
அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும்இல்லாத நிலையில் நகைகளை பறிமுதல் செய்த ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அந்த நகைகளை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் உதயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் நகைகளை கொண்டு வந்தவரிடம் விசாரணை நடத்தினர். 
விசாரணையில் அந்த நகைகளை ரயிலில் கொண்டு வந்தவர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த டெலன் தாஸ் என்பது தெரிய வந்தது. மேலும் அந்த நகைகள் அனைத்தும் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த நகை வியாபாரி ரமேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், அந்த நகைகள் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் கொடுப்பதற்காக கொண்டு வந்ததும் தெரிய வந்தது. 
உரிய ஆவணங்கள் இல்லை
இதனையடுத்து சென்னையில் இருந்த ரமேஷ்குமாரிடம் தொடர்பு கொண்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் அந்த நகைகளுக்குரிய ஆவணங்களை எடுத்துக்கொண்டு மயிலாடுதுறை வருமாறு தெரிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு வந்து சேர்ந்த ரமேஷ்குமார் கொண்டு வந்த ஆவணங்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் சரிபார்த்தனர். 
அப்போது 300 கிராம் தங்க நகைகளுக்கு மட்டுமே ஆவணம் இருந்தது. மீதமுள்ள நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதற்கிடையில் திருச்சி வணிகவரித்துறை அலுவலகத்திற்கும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
ரூ.3.66 லட்சம் அபராதம் வசூல் 
தகவலின் பேரில் மாநில வரி அலுவலர் ராஜசேகர் தலைமையிலான வணிக வரித்துறையினரும் மயிலாடுதுறைக்கு நேரில் வந்து ரமேஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். 
விசாரணைக்கு பின்னர் உரிய ஆவணம் இல்லாத நகைகளுக்கு வணிக வரித்துறையினர் உரிய வரி மற்றும் அபராதம் விதித்தனர். அதன்படி ரமேஷ்குமாரிடம் ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 232 நேற்று அதிகாலை 4 மணிக்கு இணையதளத்தின் வழியாக வசூலிக்கப்பட்டது. 
அதன் பின்னர் யில்வே போலீசாரும், வணிகவரித் துறை அலுவலர்களும் தங்க நகைகளை அதன் உரிமையாளர் ரமேஷ்குமாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்