கையெறிகுண்டு வெடித்து வாலிபர் படுகாயம்
அரகண்டநல்லூர் அருகே கையெறிகுண்டு வெடித்து வாலிபர் படுகாயமடைந்தார்.
திருக்கோவிலூர்,
அரகண்டநல்லூர் அருகே உள்ள கடகால் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் மகன் ராகுல் டிராவிட்(வயது 21). இவர் நேற்று மதியம் 12.30 மணி அளவில் தனது நண்பர்களான அதே ஊரை சேர்ந்த குமார் மகன் நாகராஜ்(26), சுரேஷ் மகன் சுரேந்தர்(19) ஆகியோருடன் தனியார் மகளிர் கலை அறிவியல் கல்லூரி எதிரே நடந்து சென்றார். அப்போது அங்கு கிடந்த பந்து போன்ற ஒரு பொருளை ராகுல் ராவிட் காலால் எட்டி உதைத்தார். அந்த பொருள் திடீரென வெடித்து சிதறியது. இதில் அவரது இடது காலில் படுகாயம் ஏற்பட்டது. உடனே அவரை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருப்பதி, சப்-இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து தடய அறிவியல் நிபுணர்களும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது வெடித்த பொருள் கையெறி குண்டு அல்லது பன்றியை பிடிக்க வைக்கப்பட்ட வெடிபொருளாக இருக்கலாம் என்று தெரிவித்தனர். இருப்பினும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.