‘இறப்பு விகிதத்தை குறைத்திடும் வகையில் பணியாற்றுங்கள்’

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பலனின்றி ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைத்திடும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று டாக்டர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2021-09-08 17:21 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கி சிறார் பள்ளி நலத்திட்டம், புகையிலை தடுப்பு திட்டம், தேசிய காசநோய் திட்டம், குடும்பநல திட்டம், தொழுநோய் திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகள் குறித்தும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிறப்பு விகிதம் குறித்தும் அரசு மருத்துவர்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பலனின்றி ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைத்திடும் வகையில் அரசு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும்.

ரத்தசோகை வருவதை தடுக்க

மேலும் வருகிற 13-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தேசிய குடற்புழு நீக்க திட்டம் கடைபிடிக்கப்பட இருக்கிறது. இந்நாட்களில் 2 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் ரத்தசோகை வருவதை தடுக்கும் பொருட்டும், அறிவுத்திறனை வளர்க்க உதவும் அல்பென்டகோஸ் மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்