சாலையை கடந்து சென்று முகாமிட்ட காட்டுயானைகள்

சாலையை கடந்து சென்று முகாமிட்ட காட்டுயானைகள்

Update: 2021-09-08 17:16 GMT
சாலையை கடந்து சென்று முகாமிட்ட காட்டுயானைகள்
மேட்டுப்பாளையம்

கோவையை அடுத்த  சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றன. அடர்ந்த வனப்பகுதியில் உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி அலையும் காட்டுயானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி வனப்பகுதியையொட்டிய கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து விவசாய விளைபொருள்களை நாசம் செய்து வருகின்றன.
 
இந்த நிலையில் சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் சிறுமுகையில் மூடிக்கிடக்கும் தொழிற்சாலை வளாகத்தில் உள்ள அடர்ந்த புதர் போல் காணப்படும் கருவேல மரங்களுக்கு இடையே முகாமிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளன. 

இந்த நிலையில் நேற்று  இரவு தொழிற்சாலை வளாகத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் இரவு நேரத்தில் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து வெளியேறி சிறுமுகை -சத்தி மெயின் ரோட்டை கடந்து சென்றன. பின்னர் யானைகள் அங்குள்ள தொழிற்சாலை எதிரே உள்ள பாழடைந்த தொழிலாளர் குடியிருப்புக்குள் புகுந்து முகாமிட்டன.

வனத்துறையினர் காட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறையினரோடு பொதுமக்களும் சப்தமிட்டு காட்டு யானையை விரட்டினர்.

அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு பாழடைந்த தொழிலாளர் குடியிருப்புக்குள் முகாமிட்ட காட்டுயானைகள் அங்கிருந்து வெளியேறி சிறுமுகை - சத்தி மெயின் ரோட்டை கடந்து மீண்டும் தொழிற்சாலை வளாகத்துக்குள் புகுந்தன.
 
அதிகாலை மற்றும் காலை நேரத்தில் காட்டுயானைகள் சிறுமுகை-சத்தி மெயின் ரோட்டை கடந்து செல்லும் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்