ஆம்பூர் அருகே ஜல்லிகற்கள் ஏற்றிவந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிபபு
ஜல்லிகற்கள் ஏற்றிவந்த லாரிகளை பொதுமக்கள் சிறைபிடிபபு
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்கொல்லை பகுதியில் 7 தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. குவாரியில் இருந்து ஜல்லி மற்றும் செயற்கை மணல், ஜல்லிதுகள்கள் லாரிகள் மூலம் ரங்காபுரம், கென்னடிகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், அய்யனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
மின்னூர் ரயில்வே ரோடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் தினமும் வந்து செல்வதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், சாலைகளில் ஜல்லி துகள்கள் விழுந்து வீடுகளின் அருகே ஜல்லி துகள்கள் நிரம்புவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று கல்குவாரிக்கு சொந்தமான லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.