ஒரே நாளில் 400 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள்
தேனி மாவட்டத்தில் வருகிற 12-ந்தேதி ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
தேனி :
கலெக்டர் ஆய்வு
தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், நேரு சிலை சிக்னல் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். நெரிசலை சிக்னலில் உள்ள போலீசாரின் நிழற்குடையில் பயன்படுத்தும் ஒலிபெருக்கியை கலெக்டர் வாங்கி சிக்னலில் காத்திருந்த மக்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது முக கவசம் அணியாமல் சென்ற மக்களை அவர் கண்டித்தார்.
முன்னதாக கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் ஆகிய இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
400 இடங்கள்
ஆய்வின் போது கலெக்டர் முரளிதரன் கூறியதாவது:-
தமிழக அரசு வருகிற 12-ந்தேதி மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தவுள்ளது. தேனி மாவட்டத்தில் அன்றைய தினம் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இந்த முகாம்களில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இந்த முகாமை 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.