சேலத்தில் வாலிபர் கொலை: அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 7 பேர் கைது
சேலத்தில் வாலிபர் கொலையில் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு கொலை செய்யப்பட்ட வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சரமாரியாக வெட்டினர்
சேலம் கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர் காடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மகன் வினோத்குமார் (வயது 26). அதே பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன், பிரதாப், உதயகுமார். இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு காளிகவுண்டர் காடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதி அருகே நின்று பேசி கொண்டிருந்தனர்.
அப்போது 15-க்கும் மேற்பட்டவர்கள் கும்பலாக அங்கு வந்தனர். அவர்கள் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் வினோத்குமார் உள்பட 4 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் அவர்கள் 4 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
வாலிபர் சாவு
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் ஆகிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக இறந்தார்.
மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபர் இறந்ததை தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு வேறு ஏதேனும் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொலையாளிகளை பிடிக்க போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களில் கொலையாளிகளை தேடினர்.
7 பேர் கைது
இந்த நிலையில் கொலை தொடர்பாக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி பழனிசாமி (40), பாபுலால் மகன் சதாம் உசேன் (23), ரமேஷ் மகன் மாதவன்(22), முருகன் மகன் பேரல் விஜி (22), சங்கர் மகன் நந்தகுமார் (22), சின்னவர் மகன் சஞ்சய் (20), பரணிராஜ் மகன் கமல் 20) ஆகிய 7 பேரை பிடித்து போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி செல்லதுரை கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ரவுடி வசூர் ராஜா, ஜான், அ.தி.மு.க. நிர்வாகி பழனிசாமி உள்பட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து செல்லதுரை ஆதரவாளர்களுக்கும், ஜானின் ஆதரவாளர்களுக்கும் இடையே முன் விரோதம் காரணமாக அடிக்கடி கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது.
சாலை மறியல்
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்லதுரையின் மாமியாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜானின் உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் ஜானின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், செல்லதுரையின் ஆதரவாளரான வினோத்குமார், மணிகண்டன், பிரதாப், உதயகுமார் ஆகியோரை சரமாரியாக வெட்டி உள்ளனர். அதில் வினோத்குமார் உயிரிழந்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருவதாக தெரிவித்தனர்.
இதற்கிடையில் வினோத்குமாரின் உடல் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அங்கு அவருடைய உறவினர்கள் திரண்டு வந்தனர். இதையொட்டி அங்கு பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் வினோத்குமாரின் உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் நுழைவு வாயில் அருகே அவர்கள், வினோத்குமாரின் கொலையில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய கோரி திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உறவினர்களிடம் ஒப்படைப்பு
இதையடுத்து அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலையில் தொடர்புடைய 10 பேர் சிக்கி உள்ளதாகவும், மற்றவர்களை விரைவில் பிடித்துவிடுவோம் என்று போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதைதொடர்ந்து வினோத்குமாரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் மேலும் சிலரை பிடித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.