விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோவிலில் பக்தர்கள் வழிபட தடை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோவிலில் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகளை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-07 21:33 GMT
சேலம்,
கொரோனா பரவல்
இந்துகளின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் வீடுகளில் விநாயகர் சிலையை வழிபட்டு நீர்நிலைகளில் கரைக்கலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சேலம் ராஜகணபதி கோவிலில் நாளை மறுநாள் பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் மற்றும் 12-ந் தேதி நடைபெறும் நிகழ்ச்சிகளை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனுமதி கிடையாது
இதுகுறித்து சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையர் குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா நோய் தொற்று காரணமாக ராஜகணபதி கோவிலில் 10-ந் தேதி (விநாயகர் சதுர்த்தி அன்று), 11, 12, 17,18, 19 ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி கிடையாது. 10-ந் தேதி காலை 10.30 மணிக்கு சாமிக்கு அபிஷேகம், தங்ககவசம் சாத்துப்படி தரிசனம் ஆகியவையும், 12-ந் தேதி இரவு 7 மணி அளவில் திருக்கல்யாண உற்சவ அபிஷேகம் மற்றும் அலங்கார தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகள் யு-டியூப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் 12 நாட்களிலும் தினமும் காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும், அதைத்தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்