குளத்துக்குள் மிதந்த காரில் வக்கீல் பிணம்
கன்னியாகுமரி அருகே குளத்துக்குள் மிதந்த காரில் வக்கீல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே குளத்துக்குள் மிதந்த காரில் வக்கீல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குளத்தில் மிதந்த கார்
கன்னியாகுமரியில் இருந்து ெநல்லை செல்லும் 4 வழிச்சாலையில் மகாதானபுரம் பகுதியில் நாடான்குளம் உள்ளது. நேற்று காலை அந்த குளத்துக்குள் ஒரு கார் மிதந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, ஏதோ அசம்பாவித சம்பவம் நடந்திருக்கலாம் என கருதி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
வாலிபர் பிணம்
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் குளத்துக்குள் மிதந்த காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காருக்குள் அழுகிய நிலையில் ஒரு வாலிபர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும், பிணமாக கிடந்தவர் யாரென்று உடனடியாக தெரியவில்லை. தொடர்ந்து, காரின் பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
வக்கீல்
விசாரணையில், குளத்துக்குள் மிதந்த காரில் பிணமாக கிடந்தவர், நெல்லை மாவட்டம் வள்ளியூர் மேலசண்முகநாதபுரம் சி.எஸ்.ஐ. ஆலய தெருவை சேர்ந்த மார்ட்டின் லூதர் கிங் (வயது 31) என்பதும், வள்ளியூர் கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
கடந்த 5-ந் தேதி மாலை வக்கீல் மார்ட்டின் லூதர்கிங் கன்னியாகுமரிக்கு செல்வதாக கூறி விட்டு காரில் வந்துள்ளார். பின்னர் மீண்டும் ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.
பரபரப்பு தகவல்
வக்கீலின் குடும்பத்தினர் அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் அவரை தேடிவந்தனர். இந்தநிலையில் தான் மார்ட்டின் லூதர் கிங், குளத்தில் மிதந்த காரில் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
சொந்த ஊருக்கு வேகமாக சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து காருடன் மார்ட்டின் லூதர்கிங் குளத்துக்குள் பாய்ந்திருக்கலாம் என்றும் அந்த சமயத்தில் காரின் கதவை திறக்க முடியாததால், மூச்சுதிணறி அவர் இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் குளத்தில் ஆகாய தாமரை செடிகள், கொடிகள் படர்ந்து கிடந்ததால், அந்த வழியாக சென்றவர்கள் குளத்தில் பாய்ந்திருப்பதை கவனிக்காமல் இருந்துள்ளனர். இதனால் 2 நாட்களுக்கு பிறகு குளத்தில் பாய்ந்த காரை பற்றிய தகவல் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதே சமயத்தில் விபத்தினால் தான் வக்கீல் மார்ட்டின் லூதர் கிங் இறந்தாரா? இல்லை வேறு ஏதேனும் காரணமா? என கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளத்தில் மிதந்த காரில் வக்கீல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.