பெருந்துறை அரசு ஊழியர் வீட்டில் இரவில் மட்டுமே பூத்து குலுங்கும் அபூர்வ பூ
பெருந்துறை அரசு ஊழியர் வீட்டில் இரவில் மட்டுமே அபூர்வ பூ பூத்து குலுங்குகிறது.
பெருந்துறையில் உள்ள குன்னத்தூர் ரோட்டில், கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான அரசு ஊழியர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்தவர் குமரன். இவருடைய மனைவி மல்லிகா. இவர்கள் 2 பேரும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்.
இவர்கள் தங்களுடைய வீட்டின் வெளிப்புறத்தில் பல்வேறு வகையான பூச்செடிகளை வளர்த்து வருகிறார்கள். இதில் பிரம்ம கமலம் என்கிற பூச்செடியும் ஒன்று ஆகும். இந்த செடியில் உள்ள பூக்கள் இரவில் மட்டும் தான் மலரும். பகலில் மொட்டுக்களாகவே இருக்கும்.
இதுகுறித்து குமரன் கூறுகையில், ‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றபோது இந்த பூச்செடியை பார்த்தேன். இரவில் 10 மணிக்கு மேல் மலரும் இந்த செடியின் பூவானது நல்ல நறுமணத்துடன் ரம்மியமாக காட்சி அளித்தது. ‘பிரம்ம கமலம்’ என அழைக்கப்படும் இந்த பூவானது சாமிக்கு உகந்தது. இதனால் இந்த பூக்களை பறித்து சாமிக்கு படைத்து வழிபடுவார்கள். இந்த செடியை கொண்டு வந்து இங்கு என்னுடைய வீட்டில் நட்டு வைத்தேன். தற்போது இது செடியாகிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளாக இதில் பூ பூக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் செடியில் ஓரிரு பூக்கள்தான் பூக்கும். ஆனால் இந்த ஆண்டு செடியில் ஏராளமான பூக்கள் பூத்து குலுங்குகின்றன,’ என்றார். இரவில் பூக்கும் ‘பிரம்ம கமலம்’ பூக்களை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.