உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசாணையின்படி இழப்பீடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் கோரிக்கை

உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசாணையின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் கூட்டியகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2021-09-07 20:22 GMT
உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு அரசாணையின்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் கூட்டியகத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
உயர்மின் கோபுரங்கள்
உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முனுசாமி, தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் மற்றும் விவசாயிகள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு வழங்கினார்கள். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-
தமிழகத்தில் பவர்கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியன சார்பில் விளைநிலங்கள் வழியாக விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம் புகளூர் முதல் சத்தீஸ்கர் வரை 8 ஆயிரம் கே.வி. திட்டமும், ராசிபாளையம் முதல் பாலவாடி வரை 400 கே.வி. திட்டமும், திருவாச்சி முதல் திங்களூர் வரை 110 கே.வி. திட்டமும், என்.மேட்டுப்பாளையம் முதல் கெட்டிசெவியூர் வரை 110 கே.வி. திட்டமும் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.
10 மடங்கு
எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் திட்டங்களில் இழப்பீடு வழங்குவதற்கு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி பயிர்கள் மற்றும் நிலத்துக்கு உயர்மின் கோபுரத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை விட 10 மடங்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வழிவகை  செய்யப்பட்டு உள்ளது. எனவே அந்த அரசாணையின்படி உயர்மின் கோபுர திட்டத்தினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் 10 மடங்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
வீடு, கிணறு, ஆழ்துளை கிணறு போன்றவற்றுக்கும் சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும். 2013-ம் ஆண்டு நில எடுப்பு சட்டப்பிரிவு 30-ன் அடிப்படையில் நிலம், பயிர்கள், மரங்களுக்கு உடனடியாக 100 சதவீதம் கருணைத்தொகை நிர்ணயித்து வழங்க வேண்டும். வேலை செய்வதற்கான விதியின்படி மாத வாடகை நிர்ணயித்து வழங்க அரசுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும். இனிமேல் செயல்படுத்தப்பட உள்ள புதிய திட்டங்களை சாலையோரமாக செயல்படுத்த வேண்டும். அனைத்து வகையான இழப்பீடு தொகையை முழுமையாக செலுத்திய பிறகே திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

மேலும் செய்திகள்