கான்கிரீட் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது

நொய்யல் அருகே புதிதாக போடப்பட்ட கான்கிரீட் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக விவசாயி உயிர் தப்பினார்.

Update: 2021-09-07 19:26 GMT
நொய்யல், 
கான்கிரீட் சாலை
நொய்யல் அருகே மரவாபாளையத்தில் இருந்து மகாத்மா காந்தி நகர் மற்றும் ரெயில்வே பாதைக்கு செல்லும் கான்கிரீட் சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது. இதையடுத்து, இந்த சாலையை புதுப்பிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் புதிதாக கான்கிரீட் சாலை போடப்பட்டது.
நொய்யல் அருகே கொங்கு நகரை சேர்ந்த விவசாயி பொன்னுசாமிக்கு (வயது 52) சொந்தமான தோட்டம் மரவாபாளையம் ரெயில்வே பாதைக்கு செல்லும் பகுதியில் உள்ளது.
டிராக்டர் கவிழ்ந்தது
இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய்கள் முதிர்ச்சி அடைந்து இருப்பதால் தேங்காய்களை பறித்து வர டிராக்டரை எடுத்து கொண்டு மரவாபாளையத்தில் உள்ள தனது தென்னந்தோப்பிற்கு சென்றுள்ளார். அங்கு கூலி ஆட்கள் மூலம் தேங்காயைப் பறித்து டிராக்டர் முழுக்க தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மரவாபாளையத்தில் புதிதாக போடப்பட்டு இருந்த கான்கிரீட் சாலையில் சென்றபோது திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. டிராக்டர் ஓட்டிவந்த பொன்னுசாமி அதிர்ஷ்டவசமாக கீழே குதித்து உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்