குடியாத்தம் அருகே தோஷம் நீக்குவதாக கூறி பெண்ணிடம் 10 பவுன் நகை மோசடி
குடியாத்தம் அருகே தோஷம் நீக்குவதாகக்கூறி பெண்ணிடம் 10 பவுன் தாலி செயினை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே தோஷம் நீக்குவதாகக்கூறி பெண்ணிடம் 10 பவுன் தாலி செயினை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தோஷம் உள்ளது
குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடி வங்ககட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். பெங்களூருவில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணா (வயது 25). இவர் தனது பெற்றோர் வீடான ஆம்பூர் அடுத்த ரால்லகொத்தூர் கிராமத்திற்கு சென்று சென்று விட்டு நேற்று காலையில் கல்லப்பாடி வங்ககட்டூர் செல்வதற்காக பஸ்சில் குடியாத்தம் வந்துள்ளார்.
அப்போது பஸ்சில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அவருடன் பேச்சுக் கொடுத்தபடி வந்துள்ளார். பஸ்சில் இருந்து இறங்கியதும் அந்த நபர் அருணாவிடம் உங்கள் கணவருக்கும், உங்கள் பெற்றோருக்கும் தோஷம் உள்ளது. பரிகாரம் செய்ய வில்லை என்றால் இருவருக்கும் ஆபத்து என கூறியுள்ளார்.
நகையுடன் மாயம்
இதனால் பயந்து போன அருணா, தோஷம் போக்க என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார் அதற்கு அந்த நபர் கோவிலில் வைத்து பரிகாரம் செய்தால் அனைத்தும் சரியாகிவிடும் என கூறி குடியாத்தம் வ.உ.சி. தெருவில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு கோவில் வளாகத்தில் அருணாவை உட்காரவைத்து, சாமிக்கு நகைகள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி அருணாவின் கழுத்திலிருந்த 10 பவுன் தாலி செயினை வாங்கிக்கொண்டு கோவிலை சுற்றி வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்டநேரமாகியும் அவர் வரவில்லை. அங்கிருந்து மாயமாகி விட்டார்.
போலீஸ் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனடியாக தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். உறவினர்கள் வந்து அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தனர். ஆனால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் அருணா புகார் அளித்தார். புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சம்பவம் நடைபெற்ற கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.