ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்

4 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

Update: 2021-09-07 18:10 GMT
ராமேசுவரம்,

4 நாட்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
4 நாட்களுக்கு தடை
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் கடந்த 3-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலும் 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியாமல் வாசலில் நின்று தரிசனம் செய்துவிட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் 4 நாட்கள் தடை காலம் முடிந்ததை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் நேற்று அதிகாலையிலேயே சாமி தரிசனம் செய்வதற்காக கிழக்கு வாசல் பகுதியில் இருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்க தொடங்கினர். வடக்கு கோபுர வாசல் வரையிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பக்தர்கள் அனுமதி
இதைத்தொடர்ந்து காலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் ஒவ்வொருவராக கோவிலுக்குள் தரிசனம் செய்ய வரிசையாக அனுமதிக்கப்பட்டனர். 4 நாட்களுக்கு பிறகு கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் சாமி-அம்பாள், மகாலட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்து விட்டு மிகுந்த மன மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.
 இதேபோல் 3 நாட்களுக்குப் பிறகு வழக்கம் போல் நேற்று அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட்டனர். இதனால் நேற்று கடற்கரை பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடலில் புனித நீராடிய பக்தர்கள் கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

மேலும் செய்திகள்